ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் – நாகலாந்து முதல்வர்!
நாகலாந்தில் அமல்படுத்தியுள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என நாகலாந்து முதல்வர் நெய்பியு ரியோ கூறியுள்ளார்.
நாகலாந்து மாநிலத்தில் சனிக்கிழமை இரவு தீவிரவாதிகள் என நினைத்து பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் ராணுவ வீரர் உட்பட இருவர் பலியாகினர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து நாகலாந்து முதல்வர் நெய்பியு ரியோ அவர்கள் பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சரிடம் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவியும் வழங்கியுள்ளோம். மத்திய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 11 லட்சமும், மாநில அரசு தலா 5 லட்சமும் நிதி உதவியாக வழங்கும் என தெரிவித்துள்ளார். மேலும் நாகலாந்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுமாறும், மத்திய அரசை கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சட்டம் நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.