கால்நடைகள் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு – கால்நடை பராமரிப்பு துறையின் முக்கிய அறிவுரைகள்!
கால்நடைகளில் ஏற்படும் உடல் தாழ்வெப்பநிலை குறித்து கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கால்நடைகளில் உடல் தாழ்வெப்பநிலை ஏற்படுவதற்கு, தேங்கி இருக்கும் தண்ணீரில் கால்நடைகள் அதிக நேரம் இருப்பது உள்ளிட்டவை முக்கிய காரணங்கள் என்றும்,அவ்வாறு ஏற்படாமல் இருப்பதற்கான அறிவுரைகளையும் தமிழக கால்நடை பராமரிப்பு துறை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக,கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ள அறிவுரைகள் குறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“கால்நடைகளில் சாதாரன உடல் வெப்பநிலை குறிப்பிடத்தக்க (101 102.5°F) அளவு (96*F) குறையும் பொழுது அவை தாழ்வெப்பநிலையில் உள்ளதாக கருதாலம்.
பொதுவாக, புதிதாக பிறந்த குட்டிகளும் இளங்கன்றுகளும் அதிகமாக உடல் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு சில நேரங்களில் இறக்கவும் நேரிடுகிறது.
காரணங்கள்:
- தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக நேரம் இருப்பது.
- குளிர்ந்த சீதோஷண நிலை மற்றும் ஈரமான தரை.
- பாதகமான சீதோஷண நிலையினால் போதுமான தண்ணீர் மற்றும் தீவனம் கிடைக்காதது.
- ஈரமான மண் உடன் கூடிய இருப்பிடம் சரிவர நீர் வடியாத கொட்டகை.
உடல் தாழ்வெப்பநிலையின் போது தோன்றும் அறிகுறிகள்:
- கால்நடைகள் சோர்வாகவும் தீவனம் எடுக்காமலும் நிற்க முடியாமல் படுத்து இருக்கும்.
- மூட்டு பகுதிகள் குளிர்ந்து காணப்படும்.
- உடல் நடுங்கும்.
- அதிக இதய துடிப்பும் மூச்சிரைப்பும் காணப்படும்.
- இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
உடல் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்:
- கால்நடைகள் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் இருந்தால், உடனடியாக அவற்றை மேடான பகுதிக்கு மாற்ற வேண்டும்.
- காய்ந்த துணி, சாக்கு அல்லது வைகோலை தரையில் பரப்பி அதன் மேல் படுக்க வைக்க வேண்டும்.
- கொட்டகையில் தண்ணீர் தேங்கி இல்லாமலும் குளிர்ந்த காற்று வீசாதவாறும் பார்துக்கொள்ள வேண்டும்.
- குடிப்பதற்கு சற்று சூடான தண்ணீரும் உரிய தீவனமும் கொடுக்க வேண்டும்.
- உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி சற்று சூடேற்றப்பட்ட குளுக்கோஸ் திரவத்தை இரத்த குழாய் வழியாக உடலுக்குள் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.