முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை!பொய்யர்களின் குடும்ப ஆட்சிக்கு முடிவு எழுதுவதாக கூறி உறுதியேற்பு!
சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தற்போது மரியாதை செலுத்துகின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை கடைபிடிக்க சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அதிமுக தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் தற்போது சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும்,அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அதிமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,”பொய்யான வாக்குறுதிகளை தந்து தமிழர்களை ஏமாற்றி நாடாளும் பொய்யர்களின் குடும்பத்தின் ஆட்சிக்கு முடிவு எழுத உறுதியேற்கிறோம் என்றும், நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து என்று பொய் வாக்குறுதியளித்த முதலமைச்சர், இனியும் தமிழர்களை ஏமாற்ற விடமாட்டோம் என்றும்,மேலும்,
வருகிறது… வருகிறது; மீண்டும் வருகிறது;நகர்ப்புற உள்ளாட்சிக்கு, தேர்தல் வருகிறது…தருகிறது, தருகிறது; நமக்கு உத்வேகம் தருகிறது; உற்சாகம் தருகிறது. இனி, பிரித்தாளும் சூழ்ச்சி செய்து, எதிரிகள் வெற்றி பெற முடியாது; வெற்றி பெற விடமாட்டோம்; வெற்றி பெற விடமாட்டோம்.
புரட்சித் தலைவரின், ரத்தத்தின் ரத்தங்களாக,ஒன்றுபடுவோம்… ஒன்றுபடுவோம்;புரட்சித் தலைவி அம்மாவின், சிங்க நிகர்த் தொண்டர்களாக, எதிரிகளை, வென்று விடுவோம்… வென்று விடுவோம்… வெற்றிகள் குவித்திடுவோம்… குவித்திடுவோம் என்று,சபதமேற்கிறோம்.. சபதமேற்கிறோம்.
நம் கழகம் ஒரு இரும்புக் கோட்டை. எந்தக் கொம்பாதி கொம்பனாலும், எதிரிகளை வெல்வதற்கு, இனிமேலும் விடமாட்டோம் என்று,அசைக்க முடியாத எஃகுக் கோட்டை என்ற, வரலாற்றை மாற்றுவதற்கு, விட மாட்டோம்; விடமாட்டோம்;
உறுதி ஏற்கிறோம்… உறுதி ஏற்கிறோம். நம் இதய தெய்வம் அம்மாவின்,நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம். நிலைக்கட்டும் புரட்சித் தலைவரின் புகழ்; வெல்லட்டும் புரட்சித் தலைவி அம்மாவின் புகழ்:இனிமேல் எப்பொழுதும் வெற்றிகள் தான்; எங்கெங்கும் வெற்றிகள் தான் என்று, உறுதி ஏற்கிறோம்… உறுதி ஏற்கிறோம்.கழகம் காப்போம், கழகம் காப்போம், தமிழ் நாடு தழைக்க, கழகம் காப்போம் !போற்றிடுவோம், போற்றிடுவோம் புரட்சித் தலைவியின் புகழை போற்றிடுவோம்!
வென்றிடுவோம், வென்றிடுவோம் களங்கள் அனைத்திலும் வென்றிடுவோம்!வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்! வாழ்க புரட்சித் தலைவி அம்மாவின் புகழ்”என்று கூறி, ஓபிஎஸ் தலைமையில்,ஈபிஎஸ் மற்றும் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.
மேலும்,சசிகலா மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.