வரும் 5-ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் சசிகலா..!
வரும் 5-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கிறார் சசிகலா.
வரும் 5-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவுதினத்தை முன்னிட்டு, சசிகலா அவர்கள் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இடத்திற்கு செல்கிறார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழக மக்களின் உரிமைக்காகவும், ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கவும் தம் வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர். உயிர் தொண்டர்களின் நலனில் அக்கறைக் கொண்டு தன்னலமின்றி பொதுநலத்தோடு மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்துக் காட்டிய ஒப்பற்ற மக்கள்தலைவி, நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடைபிடித்த அதே கொள்கையோடு, அவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து பயணிக்க, அவர்களது நினைவு நாளான 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணிக்கு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் கழகத் தொண்டர்களோடு சேர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க இருக்கிறார்கள்.
இந்த புனித நிகழ்வில், புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவியின் பாசறையில் பயின்ற பாசமிகு தொண்டர்களும், கழகத்தின் அனைத்துப்பிரிவு நிர்வாகிகளும், புரட்சித்தலைவி அம்மா அவர்களை தங்கள் முன் மாதிரியாக மனதில் வைத்து, தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் சிங்கப்பெண்களும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும், ஜாதிமத பேதமின்றி, கட்சிப்பாகுபாடு இல்லாமல் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக, ஓர் அணியில் நின்று, ஒற்றுமையாக இணைந்து, அனைவரும் முகக்கவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.