இன்று காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு …!
தொடர் அமளி காரணமாக இன்று காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று அதாவது நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான நேற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா குறித்து விவாதம் நடத்தி, அதன்பின் மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தன. ஆனால் விவாதங்கள் நடத்தப்படாமல் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின் குரல் வாக்கெடுப்பு எடுத்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் விவாதம் நடத்தப்படாமல் மசோதா நிறைவேறியதை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால், ஏற்கனவே 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்த பின் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தொடர் அமளி காரணமாக இன்று காலை 11 மணி வரையிலும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.