சட்டங்கள் என்பது மேகி உணவு அல்ல – மாணிக்கம் தாகூர்
வேளாண் சட்டங்களை விவாதங்களின்றி திரும்ப பெற்றது சர்வாதிகார போக்கை காட்டுவதாக மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது.
இதனையடுத்து, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில், தற்போது மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் இரு அவைகளிலும் வேளாண் சட்டம் ரத்து மசோதா நிறைவேற்றபட்டது.
இந்நிலையில், விவாதங்களின்றி வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்களும் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், வேளாண் சட்டங்களை விவாதங்களின்றி திரும்ப பெற்றது சர்வாதிகார போக்கை காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், செய்த தவறை மூடி மறைப்பது போல, விவாதம் நடத்தினால் அவர்களது தவறு வெளிவந்துவிடும் என்பதற்காக விவாதம் நடத்தப்படவில்லை. சட்டங்கள் என்பது மேகி உணவு போன்றது அல்ல. நாடாளுமன்றம் என்பது அனைவரின் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.