#Breaking:முன்னாள் சிறப்பு டிஜிபியின் கோரிக்கை – உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!
பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி,தன் மீதான வழக்கை,வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தமிழக சிறப்பு டிஜிபியாக முன்னதாக இருந்த ராஜேஷ் தாஸ் என்பவர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன்,இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
பின்னர், 400 பக்க கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்தனர். சமீபத்தில், தன் மீதான வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து,விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி நேரில் ஆஜரானார். டிஜிபி ஆஜராகாததற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.அதை நீதிபதி கோபிநாதன் நிராகரித்தார்.
பின்னர், வழக்கு விசாரணையை வரும் நவம்பர் மாதம் ஒத்தி வைத்து அன்று முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து,குற்றம் சாட்டப்பட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி ஆகியோரும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.அதேசமயம்,அவர்கள் மீது மீது பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பி சாட்சி விசாரணைக்காக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
இதனையடுத்து,பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி,தன் மீதான வழக்கை,வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில்,வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற முன்னாள் சிறப்பு டிஜிபியின் வாதங்களில் முகாந்திரம் இல்லை என்று கூறி அவரது கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளது.மேலும்,தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.