பாலியல் வழக்கு : ஒரே நாளில் விசாரணையை முடித்து குற்றவாளிக்கு தீர்ப்பளித்த நீதிமன்றம்!
பீகாரில் பாலியல் வழக்கு விசாரணையை ஒரே நாளில் முடித்து நீதிமன்றம் குற்றவாளிக்கு தீர்ப்பளித்து புதிய சாதனை படைத்துள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜூலை 22-ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த நாள் இது குறித்து தகவலறிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
இந்த வழக்கு இந்த மாதம் நான்காம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்பொழுது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசி காந்த் ராய், ஒரே நாளில் இந்த வழக்கை முடித்து தீர்ப்பளித்துள்ளார். அதாவது பாலியல் வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளான சிறுமியின் மறுவாழ்வுக்காக 7 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் நாட்டிலேயே மிக விரைவாக தீர்ப்பளிக்கப்பட்ட பாலியல் வழக்கு என்ற சாதனையை பீகாரில் உள்ள இந்த நீதிமன்றம் படைத்துள்ளது.