#WinterSession:”விரிவான விவாதங்களுக்கு நாங்கள் தயார்” – பிரதமர் மோடி!
டெல்லி:நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் தொடர்பாக விரிவான விவாதங்களுக்கு தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது தொடங்கியுள்ளது.இந்த குளிர்கால கூட்டத்தொடர் டிச.23-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், முதல் நாளான இன்று மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவது மற்றும் 26 புதிய மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில்,குளிர்க்கால கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் தொடர்பாக விரிவான விவாதங்களுக்கு தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக பிரதமர் கூறியதாவது:
“இது நாடாளுமன்றத்தின் முக்கியமான கூட்டத்தொடர். நாட்டின் குடிமக்கள் ஆக்கபூர்வமான அமர்வை விரும்புகிறார்கள். பிரகாசமான எதிர்காலத்திற்கான தங்கள் பொறுப்புகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க எங்கள் அரசு தயாராக உள்ளது. ஏனெனில்,நாம் பாராளுமன்றத்தில் விவாதித்து, நடவடிக்கைகளின் ஒழுங்கை பராமரிக்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்,குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டமானது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.