300 பாம்புகளை பிடித்தவரின் உயிரை பறித்த பாம்பு..! நடந்தது என்ன..?
கர்நாடக மாநிலத்தில் 300 பாம்புகளை அசால்டாக பிடித்த நபர் பாம்பு கடித்தே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கொடிஹாலா கிராமத்தில் பசவராஜ் பூஜாரி என்பவர் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கொடிஹாலா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் எங்கு பாம்பு பிடிக்க வேண்டுமென்றாலும், பசவராஜை தான் அணுகுவர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கொடிஹாலா கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டிற்குள் ஐந்தரை அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அந்த பாம்பை பிடிப்பதற்காக பசவராஜ் அழைத்துள்ளனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நிதானமின்றி இருந்த நிலையில் பாம்பை பிடிக்க மறுப்பு தெரிவிக்காமல், அந்த வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து ஐந்தரை அடி நீளமுள்ள விஷப் பாம்பை லாவகமாக படித்துள்ளார் ஆனால் பாம்பை பிடித்தவுடன் அதை பத்திரமாக காட்டிற்குள் விடாமல் பிடித்த பாம்பை கையில் வைத்து அங்குள்ள மக்களிடம் வேடிக்கை காட்டியுள்ளார். அப்போது அந்த பாம்பு அவரை ஐந்து முறை கடித்துள்ளது. இதனால் விஷம் உடல் முழுவதும் பரவி ரத்தத்தில் கலந்து சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனது திறமையால் 300 விஷப் பாம்புகளை பிடித்து பசவராஜ் போதையில் அலட்சியமாக செயல்பட்டதால் பாம்பு கடித்தே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.