நாளை கூடும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்..3 வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல்!
டெல்லி:நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி,டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனையடுத்து,கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து,பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நவ.29 ஆம் தேதியன்று 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் தோமர் நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது.மேலும்,இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில்,3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,நாளை நடைபெறும் குளிர்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டமும் இன்று நடைபெற்று வருகிறது.
மேலும்,நாளை தொடங்கும் கூட்டத்தொடரில் அனைத்து எம்.பி.க்களும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் பாஜக கொறடாக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல்,நாளை கூட்டத்தொடருக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு,எதிர்க்கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்களுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.