“முதல்வரே…அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் இது”- ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

Default Image

‘அம்மா உணவகம்’ என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு ‘கலைஞர் உணவகம்’ என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று ஓபிஎஸ் குற்றச்சாட்டு.

வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அவர்கள் நேற்று கூறியது, “அம்மா உணவகம்” என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவில் மாதிரி சமுதாய சமையல் கூடம் செயல்படுத்துவது குறித்து நேற்று புது டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாண்புமிகு தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் அவர்கள், வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக பேசியுள்ளது “அம்மா உணவகம்” என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகரில் வாழும் ஏழையெளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும், பணி நிமித்தமாக பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து செல்லும் ஏழையெளிய மக்களும் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள் படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன.

இது மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைகளிலும், மாவட்டத் தலைநகரங்களிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் ஏழையெளிய வெளிப்புற நோயாளிகள், நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் பயனடைந்து வருகின்றனர். இன்று தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 700 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

இந்த அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய்க்கும், கலவை சாதங்கள் ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும், பருப்புடன் கூடிய இரண்டு சப்பாத்தி மூன்று ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர, பெருமழை, வெள்ளம், புயல் காலங்களிலும், கொரோனா தொற்று நோய் காரணமாக முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோதும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், ‘அம்மா உணவகம்’ என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு ‘கலைஞர் உணவகம்’ என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காலப்போக்கில், அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக மாண்புமிகு அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிதாக திட்டங்களைத் தீட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, புதிதாகத் தீட்டப்படும் இதுபோன்ற திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில், நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றே நான் கருதுகிறேன்.

ஏழையெளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவகங்களை அமைப்பது என்பது மாண்புமிகு அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்த ஓர் அற்புதமான திட்டம், எனவே, இந்தத் திட்டம் ‘அம்மா உணவகம்’ என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் விருப்பம் ஆகும்.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பொதுமக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ‘அம்மா உணவகம்’ என்ற பெயரிலே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala