“இதையே சரிவர நிர்வகிக்காதவர்,முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா?” – சீமான் குற்றச்சாட்டு!

Default Image

தமிழகம்:திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆணவப்படுகொலைகள்,பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் என நாளும் வெளிவரும் கொடுஞ்செய்திகளும், குற்ற நிகழ்வுகளும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் நிலையைக் கேள்விக்குள்ளாக்குவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின், தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக் கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக ஆட்சி – அதிகரிக்கும் குற்றம்:

“தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகத் தனக்குத் தானே மணிமகுடம் சூட்டிக்கொண்டு,தற்பெருமைகொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வாகிக்காதது பெரும் ஏமாற்றத்திற்குரியது.திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆணவப்படுகொலைகள், அரசியல் படுகொலைகள், கூலிப்படையினரின் கொலைகள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் என நாளும் வெளிவரும் கொடுஞ்செய்திகளும், குற்ற நிகழ்வுகளும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் நிலையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. படுகொலை, வன்முறை வெறியாட்டம், போதைப்பொருள் விற்பனை என நாள்தோறும் விடிந்தவுடன் பார்வைக்கு வரும் இச்செய்திகள் தமிழகத்தின் தனிநபர் பாதுகாப்புக் குறித்துக் கவலையையும், பெரும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன.

தங்கை ஜோதிமணியே குற்றஞ்சாட்டியது:

அண்மையில் புதுக்கோட்டை பகுதியில் ஆடு திருடர்களால் காவல்துறை அதிகாரி பூமிநாதன் சர்வ சாதாரணமாக வெட்டிக் கொல்லப்பட்டது நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற இந்நிலை நாட்டில் நிலவும் பாதுகாப்பின்மை சூழலை உறுதிப்படுத்தியது. கரூரில் பாலியல் வன்கொடுமையால் பிள்ளையை இழந்தப் பெற்றோர் புகார் கொடுக்கச் சென்றபோது, அவர்களை ஆபாசமாகப் பேசி அவமதித்து மிகக்கடுமையாகக் காவல் துறையினர் நடந்து கொண்டதையும், பணி நேரத்திலேயே நிறைந்த மதுபோதையில் இருந்ததையும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய தங்கை ஜோதிமணியே குற்றஞ்சாட்டியதும் ஒருபக்கம் நடந்திருக்கிறது.

இந்நிலைதான் திமுக ஆட்சியின் விடியலா?:

அதேபோல, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் தமிழார்வன் சமூக விரோதிகளால் பட்டப்பகலில் தலைதுண்டித்துப் படுகொலை செய்யப்பட்டது நடப்பது சட்டத்தின் கீழான ஆட்சியா? சமூக விரோதிகள் நடத்தும் காட்டாட்சியா? எனும் கேள்வியை எழுப்புகிறது. சமூக அமைதியற்ற இந்நிலைதான் திமுக ஆட்சியின் விடியலா? சமூகத்தின் உயர் நிலையில் இருக்கக்கூடிய அரசியல் பிரமுகர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்குமே உயிர்ப்பாதுகாப்பு அற்ற கொடும் நிலைதான் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கான சான்றா? வெட்கக்கேடு! அதிமுக ஆட்சியில் காவல்துறை மூலம் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் கண்டித்து, கடந்தாட்சியில் அரசியல் செய்த திமுக, தற்போது தங்களது ஆட்சியில் அதேவகை அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் கொடுங்கோன்மை எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல.

சுயதம்பட்டம் அடித்துக்கொள்வது கேலிக்கூத்து:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக இயங்கக்கூடிய செயற்பாட்டாளர்கள் கூலிப்படையினரால் தாக்கப்படுவதும், அதனைக் காவல்துறை கண்டும் காணாதது போலக் கடந்து செல்வதும், மீனவர் ராஜ்கிரண் படுகொலையின்போது அவரது இறந்தவுடலைப் பார்க்கக்கூடக் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் அனுமதி மறுப்பதும், அதற்காகப் போராடுவோருக்கு நெருக்கடி கொடுப்பதும், கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளானதைக் கண்டித்த போராட்டத்தில் முதல்வரை பெற்றோர்கள் கைது செய்யக்கோரியபோது அதிகாரிகளும், காவல்துறையினரும் வெளிப்படையாக அவர்களை மிரட்டியதும்,

சேலம், மோரூரில் விடுதலைச் சிறுத்தைகளின் கொடியேற்றும் உரிமையை மறுத்து அவர்கள் மீதே சட்டத்தைப் பாய்ச்சியதும், ‘ஜெய் பீம்’ படம் ஏற்படுத்திய அளப்பெரும் தாக்கத்திற்குப் பின்பும் கள்ளக்குறிச்சியில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குத்தொடுத்து அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதும், சென்னையில் வாழும் அடித்தட்டு உழைக்கும் மக்களை மிரட்டி, அவர்களது வாழ்விடத்தைவிட்டுக் காவல்துறை விரட்டுவதும், மதவாத அமைப்புகள் வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும்விதமாகப் பேசும்போதும் அவர்கள் மீது எவ்விதச் சட்டநடவடிக்கையையும் பாய்ச்சாது வேடிக்கைப் பார்ப்பதுமெனக் காவல்துறையின் செயல்பாடுகள் மிக மோசமாக இருக்கையில், அத்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சி கொடுத்து வருவதாகக்கூறி, தன்னைத் தானே முதன்மை முதல்வரென விளித்து, சுயதம்பட்டம் அடித்துக்கொள்வது கேலிக்கூத்தாகும்.

தன்னைத்தானே புகழும் முதல்வர்:

‘என்னை இந்தியாவிலேயே முதலாவது முதல்வர் எனக்கூறுவது போல, தமிழகத்தையும் முதல் மாநிலம் எனக்கூற வேண்டும்’ என மேடைக்கு மேடை தன்னைத்தானே புகழந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். எந்தவகையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்கிறது? மக்கள் பிரச்சினைகளையும், சமூக அவலங்களையும் தீர்ப்பதில் முதலாவதாக இல்லாமல் செய்தி அரசியல் செய்வதிலும், வெளித்தோற்ற காட்சி அரசியல் செய்வதிலுமே காலங்கடத்தினால் எவ்வாறு முதன்மை மாநிலமாகும்? எந்தவிதத்தில் அதிமுக ஆட்சிக்கு மாற்றான ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்? தீர்க்கப்படாத சிக்கல்கள் எண்ணற்றவை வரிசைகட்டி நிற்க, ஒன்றிய அரசு எதேச்சதிகாரப்போக்கோடு மாநில உரிமைகளில் அத்துமீறிக்கொண்டிருக்க, அது எதனையும் பேசாது கடந்துசெல்வதுதான் முன்மாதிரியான மாநிலமா? தனிப்பெரு முதலாளிகளின் வரம்பற்ற வளவேட்டைக்கான நிலமாகத் தமிழகம் மாறிக்கொண்டிருக்கையில், அதனைத் தடுக்காது வேடிக்கைப் பார்ப்பதுதான் முதன்மை மாநிலத்திற்கான இலக்கணமா?

இதுவா மக்களுக்கான விடியல்?:

‘பாஜக எதிர்ப்பு’ எனப் பரப்புரைத்து ஆட்சியதிகாரத்திற்கு வந்துவிட்டு, பாஜகவை எதிர்க்கவே துணிவற்றுபோய் சமரசமாகி, அவர்களது செயல்பாடுகளையும், திட்டங்களையும் தாங்களே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வதுதான் முதன்மை மாநிலமா? எதில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது? தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தில் என்ன முதன்மையான மாற்றமும், முன்னேற்றமும் வந்திருக்கிறது? மாற்றத்திற்கான அறிகுறிகள் எதாவது தென்படுகின்றனவா? என்ன விடியல் கிடைத்திருக்கிறது? எதுவுமே இல்லாதபோது எதற்காகப் போலிப்பிம்பத்தைக் கட்டமைத்து இன்னும் மக்களை ஏமாற்ற முனைய வேண்டும்? மக்களையும், அவர்களது நலனையும் முன்னிறுத்தாது, தங்களையும், தங்களது பிம்பத்தையும் முன்னிறுத்தி அரசியல் செய்ய முற்படுவதா மக்களுக்கான விடியல்?!

ஆகவே, செய்தி அரசியல் செய்வதும், ஊடகங்கள் மூலம் காட்சி அரசியல் செய்வதுமான வெற்று விளம்பரப்போக்கை இனியாவது கைவிட்டு, மண்ணிற்கான சேவை அரசியலிலும், மக்களின் குறைதீர்க்கும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டுமென தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala