“சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சட்டவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா?” – ஓபிஎஸ் கேள்வி!

Default Image

தமிழகம்:மோட்டார் வாகன ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்குமாறு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ் என்பவர்,நேற்று காலை 9-30 மணிக்கு கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகில் உள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்த முயன்றபோது,அந்த வாகனம்  கனகராஜ் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.இதனால் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில்,தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சட்டவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா என்று பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் அவர் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சட்டவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா என்று பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு நேற்று காவல் துறை சார் ஆய்வாளர், இன்று மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு அதிகாரிகள் உயிரிழப்பது மிகுந்த அதிர்ச்சி என அளிப்பதோடு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளிவிடுமோ என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.

இனி வருங்காலங்களில்:

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு சார் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு. பூமிநாதன் அவர்கள் 21-11-2021 அன்று அதிகாலை ஆடுகள் திருடும் கும்பலை இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று கீரனூர் அருகே மடக்கி பிடித்தபோது, காவல் துறையினரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஆடுகள் திருடும் கும்பல் காவல் துறை சார் ஆய்வாளரை அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.

இது குறித்து நான் இரங்கல் தெரிவித்ததோடு, இக்கொடூரச் செயலைச் செய்தவர்களை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும்
என்றும், இதுபோன்ற கடினமான பணிகளில் ஈடுபடும் காவல் துறையினரின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்,

இனி வருங்காலங்களில் இதுபோன்ற கொடூரச் செயல்கள் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் திரு. பூமிநாதன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்கள் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

மறுநாளே:

இந்தக் கொலை நடந்து முடிந்த மறுநாளே, அதாவது 22-11-2021 அன்று காலை 9-30 மணிக்கு கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு. நா. கனகராஜ், கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகில் உள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்த முயன்றபோது, அந்த வாகனம் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. கனகராஜ் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த நிகழ்வில் படுகாயமடைந்த திரு. கனகராஜ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார் என்ற செய்தியறிந்து சொல்லொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த திரு. நா. கனகராஜ் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த கடமை அரசுக்கு உண்டு:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே அடையாளம் தெரியாத வாகனம் என்று குறிப்பிடுவதை வைத்துப் பார்க்கும்போதும், மோதிய வாகனம் நிற்காமல் சென்றதை வைத்துப் பார்க்கும்போதும், இது விபத்தாக இருக்காதோ என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுகிறது.
மோட்டார் வாகன ஆய்வாளரிடமிருந்து தப்பிப்பதற்காகத் தான் வாகனம், மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேண்டுமென்றே மோதி நிற்காமல் சென்றுள்ளதா?,என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட வேண்டும் என்றும்,

விசாரணையின் முடிவில் ஒருவேளை விபத்தாக இல்லாமல் இருந்தால், மோட்டார் வாகன ஆய்வாளரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒருவேளை விபத்தாக இருக்கும்பட்சத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வாகனத்தை மோதிவிட்டு, மனிதாபிமான அடிப்படையில் வண்டியை நிறுத்தாமல் சென்ற குற்றத்திற்காக அவர்மீது நடவடிக்கை எடுத்து, வாகன ஓட்டுநரின் உரிமத்தை ஆயுட்காலம் முழுவதும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். பொதுமக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொலையுண்ட காவல் சிறப்பு சார் ஆய்வாளர் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க உத்தரவிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஐம்பது இலட்சம் ரூபாய் மட்டும் வழங்கியிருப்பது பாரபட்சமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

முதல்வரே இதில் தனிக்கவனம் வேண்டும்:

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குக் முக்கியக் காரணியாக விளங்கும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டுமென்றும், காவல் துறை சிறப்பு சார் ஆய்வாளரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தக்க தண்டனைப் பெற்றுத் தர வேண்டும் என்றும்,

மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை தீர விசாரித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மோட்டார் வாகன ஆய்வாளரும் பணியிலிருக்கும்போது உயிரிழந்ததால், காவல் துறை சிறப்பு சார் ஆய்வாளரின் குடும்பத்திற்கு வழங்கியதைப்போல முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்