#INDvNZ: 185 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்தியா.!
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 184 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் 3-வது போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி , இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மா, இஷன் கிஷன் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த இஷன் கிஷன் 29 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்து களம் கண்ட ரிஷாப் பண்ட் வந்த வேகத்தில் 4 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா 31 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து இஷ் சோதி ஓவரில் அவரிடமே விக்கெட்டைகேட்சை கொடுத்தார். பின்னர் மத்தியில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் இருவரும் சிறப்பாக விளையாடினர். ஷ்ரேயாஸ் ஐயர் 25, வெங்கடேஷ் ஐயர் 20 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.
கடைசியில் இறங்கிய ஹர்ஷல் படேல் 18, தீபக் சாஹர் 21* ரன்கள் விளாச இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 184 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர் 3, டிரென்ட் போல்ட், ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், இஷ் சோதி தலா 1 விக்கெட்டை பறித்தனர்.