மொபைலில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் சரக்கு ரயில் மோதி உயிரிழப்பு …!
மொபைலில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் சரக்கு ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.
உத்திரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா எனும் பகுதியில் வசித்து வரும் கவுரவ் குமார் மற்றும் கபில் குமார் எனும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த சிறுவர்கள் இருவரும் ஆன்லைன் விளையாட்டாகிய பப்ஜி விளையாடிக் கொண்டே வெளியில் சென்றிருந்த பொழுது சரக்கு ரயில் மீது மோதி பரிதாபமாக இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
மதுராவிலிருந்து லட்சுமி நகர் செல்லும் தண்டவாள பாதையில் இரு சிறுவர்களின் உடல்கள் கிடப்பதுடன், ஒரு மொபைல் போன் சேதமடைந்த நிலையிலும் மற்றொரு மொபைல் போனில் பப்ஜி விளையாட்டு இயங்கி கொண்டிருந்ததாகவும் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த சிறுவன் கபில் குமாரின் தந்தை இது குறித்துக் கூறுகையில் பப்ஜி என்றால் என்ன விளையாட்டு என்றே எங்களுக்கு தெரியாது எனக் கூறியுள்ளார். இருப்பினும் விளையாடிக்கொண்டே கவனக்குறைவாக நடந்து சென்ற பொழுது சிறுவர்கள் இருவரும் ரயிலில் மோதி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.