அண்ணாமலைக்கு அகரம் தெரியாது..! ஆனால் சிகரம் தெரிந்த வைகோ சீறியிருக்க வேண்டாமா…? – அண்ணாமலை

Default Image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘ இலங்கை தமிழர், காவிரி நதிநீர், மீனவர் இன்னல், என பல பிரச்சனைகளுக்கு எழுச்சி உரை நிகழ்த்தி போராட்டம் நடத்திய திரு.வைகோ முல்லைப் பெரியாறு அணையை திமுக அரசு கேரளாவிற்கு தாரை வார்த்து, அணையின் மதகுகளை கேரளா அமைச்சர் திறந்தபொழுது, தமிழக விவசாயிகள் துடிதுடித்துப் போனார்களே, அப்போது துடிப்புடன் துயர்துடைக்க, வைகோ போராட வருவார்… வருவார்…. என்று எண்ணி விவசாயிகள் காத்திருந்தார்கள்.

முல்லைப்பெரியாறு அணைக்கு நான் நான்கு முறை போராட்டம் நடத்திவிட்டேன் அது முடிந்து போன பிரச்சனை என்று தன் அறிக்கையில் முழங்கி இருக்கிறார் வைகோ, ஆனால் இப்போது திமுகவின் அக்கறையின்மையால், ஆளுமைக்குறைவால் புதிதாக உருவான பிரச்சனையை, விவசாயிகளின் தவிப்பை அவர் கண்டு கொள்ளவே இல்லை என்று பாஜக தேனி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஆதங்கப்பட்டார்கள். மக்களுக்கு ஆதரவான எங்கள் போராட்டத்திற்கு ஆதரவுக் கரம் வேண்டிதானே விவசாயிகள் சார்பில் அவர்கள் ஆதங்கம் தீர்க்க ஐயா வைகோ அவர்களுக்கு தேனி ஆர்ப்பாட்டத்தில் அழைப்பு விடுத்தேன்.

வெறும் போலீஸ்தானே என்று என்னை இடித்துரைப்பதாக நினைத்து, ஒட்டு மொத்த காவல்துறையையே இழிவுபடுத்தியிருக்கிறார் திரு.வைகோ. போராட்டம் முடிந்த நான்கு நாட்களுக்குப் பிறகு மெதுவாக வாய் திறப்பது…. அவருக்கு பாஜகவின் போராட்டத்தால், விவசாயிகளால் ஏற்பட்ட அழுத்தத்தாலா? அல்லது ஆளும்கட்சிக்கு ஒத்து ஊதும் அரசியலா?

இந்த உங்கள் அறிக்கையில் கூட முல்லைப்பெரியாறு அணையை கேரளாவிற்கு தாரை வார்த்த திமுக அரசிற்கு ஒற்றைக் கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே ஏன்? வைகோ அவர்களே. வாரிசு அரசியலை எதிர்த்து வாள் வீசி, பின்பு அக்கட்சியிலேயே வாரிசுக்கு சாமரம் வீசி, தங்கள் கட்சியிலும் வாரிசை ஐக்கியமாக்கி, வாரிசு அரசியலுக்கு வாக்குப்பட்ட உங்களைப்பற்றி பேச பாஜகவிற்கோ, எனக்கோ அருகதை இல்லை என்பது உண்மைதான் வைகோ அவர்களே.

முல்லைப் பெரியாறு பற்றி அகரம் தெரியாத அண்ணாமலை உங்கள் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று அறிவித்துள்ளீர்கள், நன்றி, ஆனால் அதன் சிகரம் தெரிந்த நீங்கள் சீறியிருக்க வேண்டாமா? மக்கள் பிரச்சனைக்காக, விவசாயிகளுக்காக நான் போராடும் போது அதை தள்ளி நின்று எள்ளி நகையாடுவது யாரைத் திருப்திபடுத்த.

காலம் காலமாக தமிழகத்தில் போராட்டத்திற்கு மட்டும் பயன்பட்ட காவிரி நதிநீர் பிரச்சனைக்கும், மீனவர் பிரச்சனைக்கும் தீர்வுகண்ட கட்சி பாஜக தான். ஆகவே முல்லைப்பெரியாறு அணை குறித்து போராடவும், பேசவும், முழு உரிமையும், முழுத் தகுதியும் உள்ள ஒரே கட்சி பாஜக என்பதை மக்கள் அறிவார்கள்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்