பயிர்க்கடன் தள்ளுபடி:உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பு ரத்து- உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி:விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முந்தைய அரசு அரசாணை வெளியிட்டது.இதனை எதிர்த்து, விவசாயிகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து,5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.ஆனால்,இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி,விவசாயிகளின் பயிர்க்கடன் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும்,5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தமிழக அரசின் முடிவு செல்லும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.