“மக்களின் கண்ணீர் திமுகவின் ஆட்சியை அழிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை” – ஓபிஎஸ்,ஈபிஎஸ்!
சென்னை:பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைக்கு முற்றிலும் முரணான வகையில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற “விடியா அரசாக” திமுக அரசு விளங்கிக் கொண்டிருப்பதாக ஓபிஎஸ்,ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளனர்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாகவும், கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாகவும் உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்,
நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவரும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனுக்குடன் கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை உடனடியாக வழங்கி, விவசாயிகளை விரக்தியில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இல்லையெனில், அரசனின் கொடுமை தாங்காமல் மக்கள் வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக அமைந்துவிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும்,இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அண்ணாவின் கொள்கைக்கு மாறாக விடியா அரசு:
“மக்களைப் பார்த்து ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும்; ஆளுவோரைப் பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது. அதுதான் உண்மையான ஜனநாயகம்” என்றார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.ஆனால், பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அவரின் கொள்கைக்கு முற்றிலும் முரணான வகையில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற அரசாக, “விடியா அரசாக” திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு:
தமிழ் நாட்டில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் விளைந்த நெல் மூட்டைகளை நேரடி அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கிறபோது, நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்படாமல் திறந்த வெளியில் வைக்கப்படுவதாகவும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாற்று முளைக்கும் நிலையில் உள்ளன என்றும்; டெல்டாவில் மட்டும் 40 இலட்சம் நெல் மூட்டைகள் சாலையிலே கொட்டப்பட்டு, அதில் 20 ஆயிரம் மூட்டைகளில் நெல் முளைக்க ஆரம்பித்துவிட்டதாகவும், இதே நிலைதான் தமிழ் நாடு முழுவதும் நிலவுகிறது என்றும்; இதற்குக் காரணம் நேரடி கொள்முதல் மையத்தில் ஒரு நாளைக்கு 700 முதல் 1000 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும்;
நெல் கொள்முதல் நிலையங்களை தேவைப்படும் இடங்களில் அதிக அளவில் திறந்து, விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்தால் மட்டுமே முளைக்காமல் இருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்றும்; அப்போது தான் விவசாயிகளை, தற்கொலை செய்வதில் இருந்து காப்பாற்ற முடியும் என்றும்; நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு உரிய பணம் வழங்கப்படுவதில்லை என்றும்; நேரடி கொள்முதல் நிலையத்தில் குவிண்டாலுக்கு 100 ரூபாய் கையூட்டு கேட்கப்படுகிறது என்றும்; இவ்வாறாக, விவசாயிகளின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது என, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. அய்யாக்கண்ணு உட்பட அனைத்து விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் விவசாய விரோத திமுக ஆட்சி:
‘விடியலை நோக்கி’ என்று தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கிய தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ‘நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்; கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்’ என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது அதுகுறித்து வாய்மூடி. மவுனம் காக்கும் அரசாக, விவசாயிகளை ‘விரக்தியை நோக்கி’ அழைத்துச் செல்கின்ற ‘விடியா அரசாக’ தி.மு.க. அரசு விளங்குகிறது என்று விவசாயிகள் சொல்லும் அளவுக்கு தமிழ் நாட்டில் விவசாய விரோத தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் முடிவு – விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்காது:
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்த நிலையில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான, நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,015 ரூபாய் என்றும், 10 விழுக்காடு பிழிதிறன் கொண்ட கரும்புக்கான ஆதார விலை டன்னுக்கு 2,900 ரூபாய் என்றும், அதற்கு குறைவான பிழிதிறன் கொண்ட கரும்பு டன்னுக்கு 2,755 ரூபாய் என்றும்தான் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற வாக்குறுதிகளைப் போல், நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலை வாக்குறுதியை ஆட்சியின் முடிவில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற முடிவில் தமிழ்நாடு அரசு இருந்தால், அது விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்காது. இதுகுறித்த தி.மு.க-வின் வாக்குறுதி என்பது தற்போதைய காலக்கட்டத்திற்குத் தான் பொருந்தும்.
திமுக அரசுக்கு எங்கள் கோரிக்கை:
விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று திறந்த வெளியில் வைக்கப்பட்ட நிலையில், மழையின் காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துவிட்டன. அதே போல், அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து முளைத்துவிட்டன. இவற்றைத் தவிர்க்கும்பொருட்டு, தேவைப்படும் இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்றும்; பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்;
மேலும், பெருமழையின் காரணமாக டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆகவே, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி உரிய ஆய்வு செய்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா?:
‘உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா?’ என்ற பழமொழியை மனதில் நிலைநிறுத்தி, வாக்களித்த விவசாயிகளை வஞ்சிக்காமல், தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாகவும்; கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாகவும் உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்; அதே போல், நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவரும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனுக்குடன் கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை உடனடியாக வழங்கி, விவசாயிகளை விரக்தியில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழக விவசாயிகள் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
ஆட்சி அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை:
இல்லையெனில், அரசனின் கொடுமை தாங்காமல் மக்கள் வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக அமைந்துவிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளனர்.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் அறிக்கை. pic.twitter.com/BaAOn66xMu
— AIADMK (@AIADMKOfficial) November 10, 2021