தமிழகத்தில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…!

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
அது மட்டுமல்லாமல் வங்க கடலில் ஏற்கனவே அறிவித்தபடி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.