பரபரப்பு…முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஐசியுவில் திடீர் அனுமதி…!
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநில முன்னாள் முதல்வரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள்,கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் செயல்படாமல் இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், பின்னர் தனது சொந்த ஊருக்குத் தளம் மாறினார்.தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில்,அச்சுதானந்தன் அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அச்சுதானந்தன் அவர்களுக்கு இரைப்பை குடல் அழற்சி மற்றும் சிறுநீரக கோளாறுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு அளித்த வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள்,ஐந்து வருடத்துக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,இவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தின் இருபதாவது மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் ஆக பதவி வகித்தார்.’காமரேட் வி.எஸ்’ என்று அழைக்கப்படும் அவர், 1985 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் போலிட்ப்யூரோ உறுப்பினராக இருந்து வருகிறார் .1964ஆம் ஆண்டு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவிய 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.