பணமோசடி வழக்கு:எஸ்.பி.ஐ. முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி கைது!
வாராக்கடனுக்காக கையகப்படுத்திய ஹோட்டல் ஒன்றின் விலையை குறைந்த விலைக்கு விற்று மோசடி செய்த வழக்கில் எஸ்.பி.ஐ. முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் கடன் மோசடி வழக்கில் எஸ்பிஐ முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரியை அவரது டெல்லி இல்லத்தில் வைத்து ஜெய்சால்மர் சதார் போலீசார் நேற்று கைது செய்தனர்.இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான அல்கெமிஸ்ட் ஏஆர்சி நிறுவனத்தின் அலோக் திர் தலைமறைவாகியுள்ளார்.
கோடவன் குழுமம் 2008-ம் ஆண்டு ஹோட்டல் கட்டுவதற்காக எஸ்பிஐ நிறுவனத்திடம் ரூ.24 கோடி கடனாகப் பெற்றுள்ளது.அப்போது குழுமத்தின் மற்றொரு ஹோட்டல் செயல்பட்டு வந்தது. பின்னர், அந்தக் குழு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், வங்கி, அதைச் செயல்படாத சொத்தாகக் கருதி, இரண்டு ஹோட்டல்களையும் பறிமுதல் செய்தது. அப்போது எஸ்பிஐ தலைவராக சவுத்ரி இருந்தார்.இந்த ஹோட்டல்கள் அல்கெமிஸ்ட் ஏஆர்சி நிறுவனத்திற்கு ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டது.
2016 இல் அல்கெமிஸ்ட் ஏஆர்சி(Alchemist ARC) ஹோட்டல்களைக் கைப்பற்றியது மற்றும் 2017 இல் சொத்து மதிப்பீட்டின் போது சந்தை விலை 160 கோடி ரூபாய் என்று கண்டறியப்பட்டது.சௌத்ரி ஓய்வுக்குப் பிறகு அல்கெமிஸ்ட் ஏஆர்சி நிறுவனத்தில் இயக்குநராக சேர்ந்தார். தற்போது இந்த சொத்துகளின் விலை 200 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய மதிப்புள்ள இந்த ஹோட்டல்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதை எதிர்த்து கோடவன் குழுமம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஜெய்சால்மரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்,பிரதீப் சவுத்ரி, அலோக் திர், ஆர்.கே.கபூர், எஸ்.வி.வெங்கடகிருஷ்ணன், சசி மெத்ததில், தேவேந்திர ஜெயின், தருண் மற்றும் விஜய் கிஷோர் சக்சேனா ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது.சௌத்ரி திங்கள்கிழமை ஜெய்சால்மருக்கு அழைத்து வரப்படுவார் என்று கூறப்படுகிறது.