கர்நாடகா:தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தந்தை…மகனுக்கு நேர்ந்த கொடூரம்..!
கர்நாடகாவில்,சம்பளம் கேட்டு தகராறு செய்த தொழிலாளர்களை நோக்கி தந்தை துப்பாக்கியால் சுட்டதில் குறி தவறி மகன் மீது குண்டு பாய்ந்தது.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் பாண்டேஸ்வர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மோர்கன்ஸ்கேட் பகுதியை சேர்ந்த ராஜேஸ் பிரபு என்பவர் பார்சல் மற்றும் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார்.இவர்,கடந்த சில மாதங்களாக ராஜேஸ் தன்னிடம் வேலை செய்து வரும் டிரைவர்கள், கிளீனர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து,நேற்று மாலை அங்கு வந்த ஒரு டிரைவரும், கிளீனரும் அலுவலகத்தில் இருந்த ராஜேஷின் மனைவி சாந்தலாவிடம் இருந்து கூலியாக ரூ .4,000 கேட்டதாகவும், அவர்கள் பணத்திற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, சாந்தலா அருகில் உள்ள வீட்டில் இருந்த கணவர் மற்றும் மகனை அழைத்தார்.
அப்போது,ராஜேஷ் 0.32-துளை கொண்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் அலுவலகத்திற்கு விரைந்தார்.இதற்கிடையில், வாக்குவாதத்தின் போது, ராஜேஷ் பிரபுவின் மகன் சுதீந்திரா என்ற 16 வயது சிறுவன்,டிரைவர் மற்றும் கிளீனரை அறைந்ததால்,அவர்கள் இருவரும் சுதீந்திராவைத் தாக்கியுள்ளனர்.
இதனால் கோபமுற்ற ராஜேஷ்,தனது கைத்துப்பாக்கியால் அவர்களை நோக்கிச் சுட்டபோது,தோட்டா குறித் தவறி அவரது மகனான சுதீந்திராவின் தலையைத் துளைத்தது.இதில்,இடது கண் மற்றும் தலைக்கு அருகில் பலத்த காயமடைந்த சுதீந்திரா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மங்களூர் தெற்கு காவல் நிலையத்தில் ராஜேஷ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சஷிகுமார் கூறினார்.