ஹர்திக் அதிரடி.., பஞ்சாபை வீழ்த்தி தொடர் தோல்வியில் இருந்து மீண்ட மும்பை..!

மும்பை அணி 19 ஓவரில் 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அபுதாபியில் இன்று நடைபெற்ற 42-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில்  தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் 21 ரன்களும், மன்தீப் சிங் 15 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்பின் ஐடன் மார்க்ரம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் சற்று நிதானமாக விளையாடி வந்த நிலையில், மார்க்ரம் 42 ரன்கள் வெளியேறினார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது.  பும்ரா, பொல்லார்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 136 ரன்கள் அடித்தால் என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, குவின்டன் டி காக் இருவரும் களமிறங்கினர்.

வந்த வேகத்தில் ரோஹித் 8 ரன்களில் வெளியேற அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டானார். பின்னர் குயின்டன் டி காக், திவாரி இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 10 ஓவரில் ஷமி வீசிய பந்தில் குயின்டன் டி காக் 27 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்து சிறப்பாக விளையாடி வந்த திவாரி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதனைதொடர்ந்து களம் கண்ட ஹர்திக் பாண்டியா , பொல்லார்ட் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக மும்பை அணி 19 ஓவரில் 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  கடைசிவரை களத்தில் ஹர்திக் பாண்டியா 40*, பொல்லார்ட் 15* ரன்களுடன் நின்றனர். மும்பை அணி புள்ளி பட்டியலில் 10 புள்ளி பெற்று 7-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு வந்தது. கடைசியாக விளையாடிய 3 போட்டியில் மும்பை தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan