ஆட்டோ ஓட்டுனரை பழிவாங்க 22 கி.மீ தேடி சென்ற குரங்கு…!
குரங்கு ஒன்று தன்னை வனத்துறை அதிகாரிகளிடம் பிடித்து கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை பழிவாங்குவதற்க்காக 22 கி.மீ தேடி சென்றுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் எனும் பகுதியில் ஐந்து வயதான ஆண் குரங்கு ஒன்று மக்களிடமிருந்து பழங்கள் மற்றும் தின்பண்டங்களை பறிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் அந்த குரங்கின் சேட்டை அதிகரித்ததால் அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் குரங்கை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், குரங்கை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறியுள்ளனர். எனவே, அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஜெகதீசன் என்பவர் வனத்துறையினருக்கு உதவி செய்துள்ளனர். அப்பொழுது ஆட்டோ ஓட்டுனர் ஜெகதீசன் மீது பாய்ந்து அவரை அந்த குரங்கு கையில் கடித்து வைத்துள்ளது. இதனால் ஜெகதீசன் அங்கிருந்து பயத்தில் விலகியுள்ளார்.
இருப்பினும் அவரை விடாமல் குரங்கு துரத்தி சென்று உள்ளது. ஆனால் பல மணி நேர போராட்டத்துக்குப் பின்பதாக வனத்துறையினர் அந்த குரங்கை பிடித்து கிராமத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாளுர் எனும் பகுதியில் விட்டுள்ளனர். குரங்கின் தொல்லை ஒழிந்துவிட்டது என அனைவரும் நிம்மதி அடைந்த நிலையில், அந்த குரங்கு 22 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஆட்டோ ஓட்டுனர் ஜெகதீசனை பழிவாங்குவதற்காக மீண்டும் அப்பகுதிக்கு தேடி வந்துள்ளது.
இதனையடுத்து பயத்தில் நடுங்கிய ஆட்டோ ஓட்டுநர் வனத்துறையினரிடம் மீண்டும் அது குறித்து புகார் அளித்துள்ளார். இதனை எடுத்து வனத்துறையினர் மீண்டும் அந்த குரங்கை பிடித்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர். ஒரு நபரை குறிவைத்து பழிவாங்குவதற்காக 22 கிலோமீட்டர் கடந்து குரங்கு வந்துள்ளது பலரையும் வியப்படையச் செய்துள்ளது.