எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம்.., அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு – ஈபிஎஸ் பேச்சு
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டு போயுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில், அதிமுக கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டதாகவும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏதாவது ஒரு கரணம் கூறி அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என குற்றசாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டு போயுள்ளது என்றும் கொள்ளை, கொலைகள் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு தொண்டனும் வீறு கொண்டு எழுந்தது நாம்தான் வேட்பாளர் என்று எண்ணி களத்தில் இறங்கி தேர்தல் என்ற போர்க்களத்தில் எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று கூறி தேர்தலில் வெற்றி பெறுவோம், வெல்வோம் என்றும் எதிரிகள் எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும் அதை முறியடிக்கும் திறமை அதிமுக தொண்டர்களுக்கு உண்டு எனவும் எழுச்சியுடன் பேசியுள்ளார்.