பெண்கள் வேலைக்கு செல்ல தடை…மெல்ல வெளிவரும் தலிபான்களின் உண்மை முகம்…!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்கு செல்ல தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில்,பெண்களை ஒடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர்.ஆனால்,அதற்கு மாறாக தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் கல்வி கற்பதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி பெண்களின் உயர்கல்வி குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்டார்.அதன்படி, பெண்கள் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கலாம். ஆனால், அங்குள்ள வகுப்பறைகள் பாலின அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும். ஆண்கள் இல்லாத வகுப்பறைகளில் பெண்கள் படிக்கலாம். பெண்கள் கட்டாயமாக இஸ்லாமிய உடைகளை அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.
இந்நிலையில்,பெண்கள் வேலைக்கு செல்ல தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.காபூல் மாநகராட்சியில் இதுவரை பணியாற்றி வந்த பெண்கள் இனி வேலைக்கு வரவேண்டாம் என்றும் ,மாறாக வீட்டிலேயே இருந்து கொள்ளுமாறும் என்று மேயர் உத்தரவிட்டுள்ளனர்.
எனினும்,ஆண்களால் செய்ய முடியாத மற்றும் பெண்களால் மட்டுமே செய்யக்கூடிய பணிகளை மேற்கொள்ளும் பெண்கள் மட்டுமே வேலைக்கு வரலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு,பெண்களை ஒடுக்கும் தலிபான்களின் கொடூர முகம் மெல்ல மெல்ல வெளிவருவதால் ஆப்கான் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.