நாடு முழுதும் பதிவாகும் கொரோனா வழக்குகளில் 68% கேரளாவை சேர்ந்தது – மத்திய சுகாதார செயலாளர்!
நாடு முழுதும் பதிவாகும் கொரோனா வழக்குகளில் 68% கேரளாவை சேர்ந்தது என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தற்போதும் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், கேரள மாநிலத்தில் அதிக அளவில் தற்போது கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் தற்போது கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள், நாடு முழுவதும் பதிவாக கூடிய மொத்த வழக்குகளில் கிட்டத்தட்ட 68% கேரளாவை சேர்ந்தது தான் என கூறியுள்ளார்.
மேலும், மற்ற மாநிலங்களான மிசோராம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வாராந்திர கொரோனா பாதிப்பு வீதம் தற்பொழுது 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளதாகவும், இன்னும் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் கொரோனா 5% அதிகரித்து வருவதாகவும், இந்த பகுதிகளில் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் முறையான தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.