கே.சி.வீரமணி தொடர்புடைய இடங்களில் பணம், நகை, ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள் பறிமுதல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் நடந்த சோதனையில் பணம், நகை, சொகுசு கார்கள் பறிமுதல்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக வேலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதன்படி, திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இதேபோல், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் நடந்த சோதனையில் பணம், நகை, சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கே.சி வீரமணி தொடர்புடைய இடங்களில் ரூ.34.01 லட்சம் பணம், ரூ.1.80 லட்சம் வெளிநாட்டு பணம், 5 கிலோ தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் கே.சி.வீரமணி வீட்டின் வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான மணல் குவித்து வைக்கப்பட்டியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. வங்கி கணக்கு புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.