“பொதுச் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த சிறந்த காரிய கர்த்தாக்கள்” – பிரதமர் மோடி..!
குஜராத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர், எந்த எதிர்ப்பின்றி பூபேந்திர படேல் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு கடந்த 13-ஆம் தேதி காந்திநகரில் உள்ள ராஜ்பவனில் பதவி ஏற்று கொண்டார்.
இதனையடுத்து,இன்று குஜராத் ஆளுநர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா காந்திநகரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் முன்னிலையில் நடைபெற்றது.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி முன்னிலையில் புதிய அமைச்சரவையில் மொத்தம் 24 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
இந்நிலையில்,புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் பாஜக கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மிகச்சிறந்த காரியகார்த்தாக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“குஜராத் அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பதவியேற்ற அனைத்து கட்சி சகாக்களுக்கும் வாழ்த்துக்கள். இவர்கள் பொது சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, பாஜக கட்சியின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை பரப்பிய மிகச்சிறந்த காரிய கர்த்தாக்கள். இனிவரும் காலங்கள் பலனளிக்கும் வகையில் வாழ்த்துகள்.”,என்று கூறியுள்ளார்.
Congratulations to all Party colleagues who have taken oath as Ministers in the Gujarat Government. These are outstanding Karyakartas who have devoted their lives to public service and spreading our Party’s development agenda. Best wishes for a fruitful tenure ahead.
— Narendra Modi (@narendramodi) September 16, 2021
இதற்கிடையில்,குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலின் கீழ் புதிய அமைச்சரவை பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக இன்று அம்மாநில சபாநாயகர் ராஜேந்திர திரிவேடி தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.