7.5% இட ஒதுக்கீட்டில் 11,000 மாணவர்களுக்கு சீட்…ஆனால்,நிபந்தனை – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!

Default Image

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வுக்கு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு, சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு,முதற்கட்டமாக பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்ற 11 ஆயிரம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் சேர இடம் கிடைக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் கூறியதாவது: “அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 11 ஆயிரம் பேருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.அதன்படி,பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்கள் 22,133 பேரில் 15,660 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால்,6 முதல் 12 வரை அரசு பள்ளிகளில் படித்திருந்தால் மட்டுமே 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.எனினும்,மாணவர்கள் விருப்பப்பட்ட கல்லூரியில் பயில்வதில்தான் மாற்றம் ஏற்படுமே தவிர, மற்றபடி விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும்.இதற்காக மொத்தம் 51 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை. அரசு பள்ளியில் படித்தது குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிடாத மாணவர்கள் மீண்டும் தெரிவிக்கலாம்.விடுபட்ட மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

மேலும்,தமிழக முதலமைச்சர் சமூக நீதி இட ஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைத்து அறிவித்திருக்கிறார்.எனவே,சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது முறையாக நடைபெறும்”,என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்