“நீட் தேர்வு என்பது ஆள்மாறாட்டம்;எவ்வித சமரசம் கிடையாது” – முதல்வர் ஸ்டாலின் ..!

Default Image

நீட் உயிர்க்கொல்லிக்கு மாணவி கனிமொழி பலியாகியிருப்பது வேதனையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.இந்த நிலையில், நீட் தேர்வினை எழுதிய அரியலூரை சார்ந்த கனிமொழி என்ற மாணவி  நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், தனக்கு மருத்துவ படிப்பு சேர்க்கை கிடைக்குமா..? என அச்சம் இருப்பதாக தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து,தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்நிலையில்,நீட் உயிர்க்கொல்லிக்கு மாணவி கனிமொழி பலியாகியிருப்பது வேதனையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:

ஒரு சகோதரனாக கேட்கிறேன்:

“நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின் பெற்றோரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக் கொள்கிறேன்.

எவ்வித சமரசமும் கிடையாது:

தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க. தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச் சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன்.

நீட் தேர்வு என்பது:

நீட் தேர்வு என்பது தகுதியை எடை போடும் தேர்வல்ல என்பதை, ஆள்மாறாட்டம் – வினாத்தாள் விற்பனை – பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில் சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

விரட்டுவோம்:

மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிகாகப் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச் செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களே அளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திடக் கோருகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம்.

மாணவி கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலை உருவாக்கிடுவோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்