“40,000 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி;முதல்வர் ஸ்டாலின் இதனைச் செய்ய வேண்டும்” – ஓபிஎஸ் கோரிக்கை..!

Default Image

ஃபோர்டு நிறுவனம் மூடுதல் எதிரொலியாக 40,000 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும்,அந்நிறுவனம் தொடர்ந்து இயங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம்,ஆலையை மூடுவதாக அறிவித்ததையடுத்து,மாற்று ஏற்பாடுகள் குறித்து அதன் நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில்,ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள மறைமலைநகரில் இயங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:

இதை சொன்னால் மிகையாகாது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், நிலைத்த வேலை வாய்ப்புகளை அளிப்பதிலும், தொழில் முனைவோர் மேம்பாடு அடைவதிலும் நாற்றங்காலாக விளங்குவது தொழில் துறை மற்றும் அதன் தொடர்புடைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தத் துறைகளை ஊக்குவிக்கவும், தொழில் அமைதியை உருவாக்கவும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவிஅம்மா அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்கள்.

ஊழியர்களுக்கு பேரிடியையும்,அதிர்ச்சியையும்  தரும் தகவல்:

தொழில்கள் வளர்ந்தால் தான் தொழிலாளர்கள் வாழ முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு புதிது புதிதாக தமிழ்நாட்டில் தொழில்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம், விற்பனை பாதிப்பு மற்றும் தொடர் இழப்பு காரணமாக சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையை அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் மூடுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பேரிடியை அளிப்பதாக அமைந்துள்ளது என்றும், கடந்த ஒரு வாரமாக உற்பத்தி நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், மூலப் பொருட்கள் பற்றாக்குறை என்று கூறப்பட்டாலும், நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கான தந்திரம் தான் இது என்றும், எப்பொழுது உற்பத்தி தொடங்கப்படும், எப்பொழுது தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லையென்றும் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட ஊதிய உடன்படிக்கை ஓராண்டுக்கு மேற்கொள்ளப்பட்ட போதே சந்தேகம் அடைந்து, இது குறித்த கேள்வியை எழுப்பியதாக சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கம் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளது.

ஃபோர்டு இயக்குனர் அளித்த விளக்கம்:

இது குறித்து கருத்து தெரிவித்த அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர், தொழிற்சாலையை மூடுவது என்பது கடினமான முடிவு தான். எங்களுக்கு இதைத் தவிர வேறு முடிவு தெரியவில்லை. பல்வேறு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டும், உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வாகனங்களால் நீண்ட காலத்திற்கு லாபம் ஈட்டும் பாதையை தங்களால் அடைய முடியவில்லை என்று தெரிவித்து இருப்பதாகவும் பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது.

இதனை தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை:

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காரணமாக சுமார் 4,000 நேரடித் தொழிலாளர்களின் எதிர்காலமும், கிட்டத்தட்ட 40,000 மறைமுகத் தொழிலாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. மட்டுமல்லாமல், ஃபோர்டு மோட்டார் நிறுவனத்திற்கு மூலப் பொருட்களை விநியோகித்து வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், கிட்டத்தட்ட நான்காயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மூடும் அபாயம் உள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு.

எனவே, நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படையக் கூடிய இந்தப் பிரச்சனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தலையிட்டு, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள மறைமலைநகரில் இயங்கவும், தொழிலாளர்கள் தொடர்ந்து அங்கு பணி புரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest