“ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் 55% பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி” – கருத்துக்கணிப்பு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் 55% பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் என்று காலுப்( Gallup) பாகிஸ்தான் நியூஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 15-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றிவளைத்த தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படை முழுவதும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரத்தையும் தங்கள் வசப்படுத்தினர்.
இதனையடுத்து,புதிய அரசின் அமைச்சரவை பட்டியலை தலிபான் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஆப்கானிஸ்தானில் புதிய பிரதமராக தலிபான் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார்.
துணைத் தலைவராக முல்லா அப்துல் கனி பரதார் மற்றும் முல்லா அப்துல் சலாம் இருப்பார்கள் என்று தலிபான்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக முல்லா ஒமரின் மகன், முல்லா முகமது யாகூப், நிதியமைச்சராக ஹெதாயத்துல்லா பத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஆனால்,ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழா நேற்று நடைபெறவிருந்த நிலையில் தலிபான்கள் ரத்து செய்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில்,ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி பற்றி சுமார் 55 சதவிகித பாகிஸ்தானியர்கள் சாதகமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என்று காலுப்( Gallup) பாகிஸ்தான் நியூஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.பாகிஸ்தானில் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 13 மற்றும் செப்டம்பர் 5 க்கு இடையில் நடத்தப்பட்டது.
அப்போது,ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அமைத்ததில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களா?’என்று பாகிஸ்தான் மக்களிடையே கேட்டதில் 55 சதவிகிதம் பேர் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகின்றனர், 25 சதவிகிதம் பேர் மகிழ்ச்சியற்றவர்களாகவும், மற்றொரு 20 சதவிகிதத்தினர் எந்த பதிலும் கூறவில்லை என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு பதிலளித்தவர்களின்படி,தலிபான் அரசை ஆதரித்தவர்களில், 68% பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.குறிப்பாக,58% ஆண்கள் தலிபானுக்கு ஆதரவான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அதேபோல 36% பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.