கேரளாவின் பல்கலை.பாடத்திட்டத்தில் இடம்பெற்ற ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வரலாற்றால் ஏற்பட்ட சர்ச்சை…!
கேரளாவின், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் விடி சாவர்க்கர், எம்எஸ் கோல்வால்கர் மற்றும் தீன்தயாள் உபாத்யாயா உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத் திட்டத்தில் புதிதாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு,அதில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) சித்தாந்தவாதிகளான விடி சாவர்க்கர், எம்எஸ் கோல்வால்கர் மற்றும் தீன்தயாள் உபாத்யாயா ஆகிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாணவர் சங்கம், காங்கிரஸின் மாணவர் பிரிவு மற்றும் முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவான முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பின் செயல்பாட்டாளர்கள் பல்கலைக்கழகத்தில் புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டத்தின் நகல்களை வியாழக்கிழமை எரித்தனர்.ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் ஒரு பகுதியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) இந்தப் புத்தகங்களைச் சேர்க்கும் நடவடிக்கையை விமர்சித்தது.
எனினும் இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் காவிமயமாக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு,அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்,அவர் கூறுகையில், ”அரசியல் சிந்தனைகள் மற்றும் வரலாற்றைப் படிக்கும்போது அதன் அனைத்துப் பக்கங்களும் விவாதிக்கப்பட வேண்டும். எனினும் இதுகுறித்து வெளியான தகவலின்படி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதா, வேண்டாமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும் மாநில அரசு இதுகுறித்துப் பல்கலைக்கழகத்திடம் இருந்து அறிக்கை கோரியுள்ளது. அதேபோலப் பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய, கேரளப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சார்பு துணைவேந்தரான பிரபாஷ் தலைமையில் இரு நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக,தேசவிரோதக் கருத்துகளைத் தெரிவித்தல், மாணவர்கள் மத்தியில் போதித்தல் போன்றவை கூடாது என்று அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் காசர்கோட்டில் உள்ள கேரள மத்தியப் பல்கலைக்கழகம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.