நள்ளிரவு முதல் இணைய சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவையை துண்டித்த ஹரியானா அரசு…!
ஆகஸ்ட் 28 ஆம் தேதி விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கர்னாலில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரியும், ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி இந்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், சுஷில் கஜ்லா எனும் விவசாயி உயிரிழந்தார். ஆனால், அவர் மாரடைப்பால் தான் உயிரிழந்தார் என போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.
இந்நிலையில் இதை கண்டித்து ஹரியானா மினி தலைமை செயலகம் நோக்கி விவசாய சங்கத் தலைவர்கள் பேரணி நடத்த திட்டமிட்டு பாரதீய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைத், ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் மற்றும் சில விவசாயிகள் பேரணியாக சென்றனர். ஆனால், இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி தரவில்லை. இருப்பினும் தடையை மீறி செல்ல முயன்றதால் பேரணியில் ஈடுபட்ட தலைவர்கள் சிலர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் விதமாக கர்னால் மாவட்டம் முழுவதும் இன்டர்நெட் சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை இணைய சேவைகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், போலீசாரின் தடியடியால் உயிரிழந்த விவசாயி மரணத்துக்கு அரசு பதில் சொல்ல வேண்டும் எனவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகேஷ் திகைத் கோரிக்கை விடுத்துள்ளார்.