ஆப்கானிஸ்தானின் புதிய அரசின் அமைச்சரவை பட்டியலை வெளியிட்டது தலிபான் அமைப்பு!

Default Image

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான் அமைப்பினர் மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ளனர்.

கடந்த 15-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றிவளைத்த தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படை முழுவதும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரத்தையும் தங்கள் வசப்படுத்தினர்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தைக் கட்டமைப்பதற்காகவே ஒரு சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக இழுபறி நிலவிய நிலையில், தற்போது புதிய அரசின் அமைச்சரவை பட்டியலை தலிபான் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஆப்கானிஸ்தானில் புதிய பிரதமராக தலிபான் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார்.

துணைத் தலைவராக முல்லா அப்துல் கனி பரதார் மற்றும் முல்லா அப்துல் சலாம் இருப்பார்கள் என்று தலிபான்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக முல்லா ஒமரின் மகன், முல்லா முகமது யாகூப், நிதியமைச்சராக ஹெதாயத்துல்லா பத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிராஜுதீன் ஹக்கானி, அமெரிக்க அரசால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ளனர். நவம்பர் 11-ஆம் தேதி புதிய அரசு அமைப்பதைக் கொண்டாடத் தலிபான்கள் தயாராகி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

புதிய அரசு பதவியேற்பு விழாவிற்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், துருக்கி, ஈரான் மற்றும் கத்தார் உள்ளிட்ட 9 நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் தலிபான்களின் உறவும் மேம்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய எமிரேட் என்று அழைக்கும் தலிபான்கள் புதிய அரசாங்கத்தை எப்படி நடத்துகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். புதிய அரசாங்கம் விரைவில் செயல்படத் தொடங்கும் என்றும் இனி அமைதியான, வளமான மற்றும் தன்னம்பிக்கை மிகுந்த ஆப்கானிஸ்தானை விரும்புவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்