உத்தரப்பிரதேசம்: பள்ளிக்கு தினமும் படகு ஓட்டி செல்லும் மாணவி..!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிக்கு தினமும் 11 ஆம் வகுப்பு மாணவி படகு ஓட்டி செல்கின்றார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழையால் பஹ்ராம்பூரில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி சந்தியா சாஹினி, வேறு வழியின்றி பள்ளிக்கு தினமும் பள்ளி சீருடையில் 800 மீ தொலைவு படகு ஓட்டி சென்று படித்து வருகிறார்.
இது குறித்து அம்மாணவி தெரிவித்துள்ளதாவது, பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்கள் மூடப்பட்டுள்ளது. தற்போது திறந்திருக்க கூடிய சூழலில் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லாத காரணத்தால் இணைய வழி கல்வியில் என்னால் படிக்க முடியவில்லை. எனது படிப்பிற்கு நான் முழுமையாக பள்ளியை மட்டுமே நம்பியிருக்கிறேன், அதனால் தினமும் படகில் செல்ல முடிவெடுத்தேன்.
எனது கிராமத்தில் உள்ள பல மாணவிகள் வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிக்கு செல்ல பயத்துடன் வீட்டில் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு பயம் கொள்வதற்கு நேரம் இல்லை, எனது இலக்கை நோக்கி செல்ல நான் கடினமாக உழைத்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.