வகுப்பறையில் விசில் அடித்த 40 மாணவர்களுக்கு பிரம்படி – 10 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரம்பால் தாக்கியதில் மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டத்தின் தோஹானா எனும் பகுதியில் உள்ள, அரசு பள்ளி ஒன்றில் நேற்று மாணவர்கள் வகுப்பறையில் வைத்து விசில் அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசில் அடித்த மாணவர்கள் அனைவரையும், அவர்களது பெற்றோர்களை வரவழைத்து வருமாறு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சில மாணவர்களின் பெற்றோர்கள் மட்டும் வந்திருந்த நிலையில், பெற்றோர்களின் முன்னிலையில் வைத்து அந்த மாணவர்களை ஆசிரியர்கள் தாக்கியுள்ளனர்.
ஆசிரியர்கள் பிரம்பால் அடித்ததில் பல மாணவர்களின் முதுகுப்புறம் மற்றும் கால்களில் வீக்கங்கள் ஏற்பட்டு மாணவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனையடுத்து இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சாதி அடிப்படையில் தான் மாணவர்களை தாக்கியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிரியர்கள் தாக்கியது குறித்து பெற்றோரிடம் கூறினால், பெண் ஆசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி புகார் அளித்து விடுவோம் என மிரட்டியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 10 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் தாக்கி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.