தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை மேம்படுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழ்நாட்டில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், மின் செலவை குறைப்பதற்கும் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 25,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டு உள்ளது. அதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.1,32,500 கோடி நிதி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறனை மேம்படுத்தவும், புதிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை கையாளுவது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியத்துக்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துக்கு இடையே முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், மரபுசாரா எரிசக்தி துறையின் உத்திகள் குறித்து ஆலோசனை வழங்கும். சந்தை ஆய்வு, ஒப்பந்த புள்ளி மேலாண்மை மற்றும் அமலாக்கம் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எரிசக்தி துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் தமிழ்நாடு உற்பத்தி பகிர்மான கழகம் தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்