1-ஆம் தேதி முதல் சென்னையில் 200 வார்டுகளிலும் 200 தடுப்பூசி முகாம்..!
நாளை மறுநாள் முதல் சென்னையில் உள்ள 200 வார்டிற்கு 1 முகாம் என 200 தடுப்பூசி முகாம்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், 1.9.2021 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 27.08.2021 முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 28.08.2021 அன்று முதல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 01.09.2021 அன்று முதல் 112 கல்லூரிகளில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டலத்திற்கு மூன்று கோவிட் தடுப்பூசி முகாம்கள் என 45 தடுப்பூசி முகாம்கள் பள்ளிகள், மாநகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்கள் 01.09.2021 முதல் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும், 45 இடங்களில் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம்கள் 1.9.2021 அன்று முதல் வார்டிற்கு 1 முகாம் என 200 தடுப்பூசி முகாம்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 26.08.2021 அன்று 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். பொதுமக்களின் அருகாமையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்ட காரணக்கினால் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சியின் 200 வார்டுகளில் தடுப்பூசி முகாம்கள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த 200 தடுப்பூசி முகாம்கள் குறித்து விவரங்களை மாநகராட்சியின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த 200 வார்டுகளில் உள்ள தடுப்பூசி முகாம்களில் இணையதளம் வாயிலாக தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்து கொள்ள மாநகராட்சியின் grcvaccine.in என்ற இணையதள இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தத் தடுப்பூசி முகாம்கள் நாள்தோறும் காலை 8.30மணி முதல் மாலை 400 மணி வரை நடைபெறும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 29.08.2021 வரை 27,17,705 முதல் தவணை தடுப்பூசிகள் 12,11,775 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 39,29,480 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.