“நதியினில் வெள்ளம்;என் நிலைமை அவருக்கு தெரியும்” – எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் கருத்து..!
வேளாண் சட்டத்துக்கு தனித் தீர்மானம் குறித்த விவாதத்தின்போது தன் நிலைமை நீர்வளத்துறை அமைச்சருக்கே தெரியும் என்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றை தினம் கால்நடை, வேளாண் மற்றும் மீன்வள ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அதன்படி,சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.இதனையடுத்து, தமிழக அரசின் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் முன்மொழிந்தார்.
அந்த தீர்மானத்தில்,3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து,மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் வெளியேறினர்.
அப்போது,சட்டப் பேரவையில் வேளாண் சட்டத்துக்கு தனித் தீர்மானம் குறித்த விவாதத்தின்போது எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தீர்மானத்தை தன்னால் ஆதரிக்கவோ எதிர்க்கவோ முடியாத நிலையில் உள்ளதாக கூறியதாவது:
“நதியினில் வெள்ளம்,கரையினில் நெருப்பு,இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு..என்று சிவாஜி பட பாடலை மேற்கோள் காட்டி,”இதுதான் என் தற்போதைய நிலைமை”,என்று கூறினார்.மேலும், மூன்று வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் எனது நிலை என்ன என்பது அவை முன்னவருக்குத் தெரியும் என்று கூற, அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதனைத்தொடர்ந்து,வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்று அவரிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கேட்டதற்கு, “வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், அது தொடர்பாக தீர்ப்பு வெளிவந்த பிறகே,என்னால் பேச முடியும்”, என்று ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பதிலளித்தார்.
இதற்கிடையில்,பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து போன்று, அதிமுகவும் வெளிநடப்பு செய்தது.