மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்த கூடாது – மணீஷ் சிசோடியா!
பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி மாணவர்களை பள்ளிக்கு வர சொல்ல கூடாது என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் கொரோனாவை தடுக்கும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது போல தலைநகர் டெல்லியிலும் கொரோனாவை ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் விளைவாக அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், செப்டம்பர் 8-ம் தேதியில் இருந்து ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கூறியுள்ள டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அவர்கள் பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வர வைக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு பெற்றோர்களின் சம்மதம் அவசியம் எனவும், பெற்றோர்கள் அனுமதிக்காத பட்சத்தில் மாணவர்கள் கட்டாயமாக பள்ளிக்கு வர வேண்டாம் எனவும், அப்படி பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு வருகைப் பதிவில் வந்து விட்டதாகவே பதிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.