கைகொடுத்த கொரிய நாடுகள் மாநாடு!மே மாதத்தில் அணு ஆயுத பரிசோதனை தளத்தை மூடுகிறது வடகொரியா!
வடகொரியா மே மாதத்தில் ,கொரிய நாடுகள் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க உச்சி மாநாட்டின் முதல் வெற்றியாக, அணு ஆயுத பரிசோதனை தளத்தை மூடுகிறது.
வட, தென் கொரியா நாடுகள் இடையேயான உச்சிமாநாடு, கடந்த வெள்ளியன்று எல்லையில் உள்ள பன்முன்ஜோம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் பூரண அணு ஆயுத ஒழிப்புக்கு இரு நாட்டு அதிபர்களும் ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த சந்திப்பு குறித்து பேசியுள்ள தென் கொரிய அதிபர் அலுவலக செய்தி தொடர்பாளர் ((Yoon Young-chan)) யூன் யங் – சங், அணு ஆயுத பரிசோதனை தளம் மே மாதம் மூடப்படும் என, வடகொரியா அதிபர் கிம்-ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன்-ஜே-இன்னிடம் உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான நடைமுறைகள் குறித்து தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆயுத வல்லுநர்கள், பத்திரிக்கையாளர்களை விரைவில் அழைத்து விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்கா தம்மை தவறாக நினைத்துக் கொண்டிருப்பதாகவும்,. ஒருமுறை சந்தித்து பேசினால், தாம் வெறுக்கத்தக்கவர் அல்ல என்பதையும் அமெரிக்கா புரிந்து கொள்ளும் என்றும் கிம்-ஜோங்-உன் தெரிவித்ததாக யூன்-யங்-சன் குறிப்பிட்டார். இதனிடையே அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சுவார்த்தை 3 அல்லது 4 வாரங்களில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.