காவிரி மேலாண்மை வாரியம்:தொடரும் மத்திய அரசின் துரோகம்? தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? மு.க.ஸ்டாலின்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், மத்திய அரசின் துரோகம் தொடர்வதாகவும், இதற்கு தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் விதித்த ஆறுவார காலக்கெடு முடிந்த பிறகு, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியதாக தெரிவித்திருக்கிறார். இதனை ஏற்று மே மாதம் 3ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவே போவதில்லை என்பதற்கு சான்றாக, மேலும், 2 வார கால அவகாசம் கோரி புதிய மனுவை தாக்கல் செய்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களும், விவசாயிகளும் ஏமாளிகள் அல்ல என்பதை மத்திய பாஜக அரசு உணர்ந்து கொள்ளும் காலம் விரைவில் வரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
வரைவு அறிக்கை தயாரிக்க மேலும் 2 வார அவகாசம் கேட்கும் மத்திய அரசின் போக்கை, மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு எதிர்க்கப்போகிறதா? அல்லது பொறுத்திருக்கப் போகிறதா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.