கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான செலவை கர்நாடக அரசே ஏற்கும் – கர்நாடக முதல்வர்!
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிந்தைய செலவை கர்நாடக அரசே ஏற்கும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்து வரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையின் போது இந்தியாவில் பலர் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்பொழுதும் பல்வேறு மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கான மருத்துவ செலவை கர்நாடக அரசே ஏற்கும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார். அதாவது கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை பெற்றவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் நான்கு வாரங்களுக்கு ஒரு ஊசியை எடுத்து கொள்ள வேண்டுமாம். இந்த ஊசி ஒன்றின் விலை 10,000 முதல் 12,000 வரை உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, குடும்பங்கள் மீதான பொருளாதார சுமையை கருத்தில் கொண்டு கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கான அனைத்து செலவையும் அரசாங்கமே எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் முழுமையாக குணமடையும் வரை அரசாங்கம் அனைத்து செலவுகளையும் ஏற்கும் எனவும் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார்.