தேனிலவுக்காக வாடைகைகைக்கு விடப்பட்ட பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை – அதிர்ச்சியடைந்த நிர்வாகம்!
ஆந்திராவில் உள்ள பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையை முதலிரவுக்காக வாடைகைகைக்கு விடப்பட்டதை தொடர்ந்து மாநில அரசு அறிக்கை கேட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (JNTU-K) காக்கிநாடாவில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் உள்ள ஒரு அறையில் புதிதாக திருமணமான தம்பதியினர் முதலிரவு கொண்டாடுவற்காக வாடைகைகைக்கு விடப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின் மகளிர் அதிகாரமளிப்புப் பிரிவின் இயக்குனர் ஸ்வர்ணகுமாரி என்பவர் பெயரில் புதுமண தம்பதியின் முதலிரவுக்காக வாடகைக்கு எடுத்துள்ளார். அன்றைய தினங்களில் அந்த அறை அலங்காரம் செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி ஆவார்.
அந்த அறையை பயன்படுத்திய, தம்பதியினரும் அறை அலங்காரத்தை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியதுடன், அறையை பயன்படுத்தியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, விருந்தினர் மாளிகை அறை வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்துள்ளது.
கவுரவ பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் இந்த அறை முதலிரவுக்காக வாடகைக்கு விடப்பட்டது தொடர்பாக மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், விருந்தினர் மாளிகையில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவதை விசாரிக்க அதன் ரெக்டர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்த சம்பவம் குறித்து மாநில அரசும் அறிக்கை கேட்டுள்ளது.
பேராசிரியரின் மாணவருக்காக அந்த அறையை, பல்கலை ஊழியர் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அது பயன்படுத்தப்பட்ட நோக்கம் தவறானது. நாங்கள் அது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம் என்று ஜேஎன்டியு-கே பதிவாளர் ஆர். ஸ்ரீனிவாச ராவ் கூறினார்.குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவாளர் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, அந்த அறிக்கையை, மாநில உயர்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாநில பெண்கள் ஆணைய தலைவியும், விருந்தினர் மாளிகை அறை வாடகைக்கு விடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.