திருச்சி அகதிகள் முகாமில் மேலும் 12 பேர் தற்கொலை முயற்சி…!
திருச்சி அகதிகள் முகாமில் மேலும் 12 பேர் தற்கொலை முயற்சி.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில், கைதிகளுக்கான சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. அங்கு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் உட்பட 120 உள்ளனர். இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த அகதிகள் உள்ளனர். இந்த சிறப்பு முகாமில் சுமார் 80 இலங்கை தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் தங்களை பொய் வழக்கில் தமிழக போலீசார் கைது செய்துள்ளதாகவும், அந்த வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் தங்களை அகதிகள் முகாமில் அடைத்து உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். எனவே சட்டப்படி விடுதலை செய்ய வேண்டும் என்றும், தாங்கள் இந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறோமோ அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கருணை கொலை செய்து விடுங்கள் என்றும் அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக ரமணன் என்பவர் வயிற்றை கத்தியால் கீறியும், நிப்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், மற்றும் சிலர் தூக்க மாத்திரை சாப்பிட்டும், மரத்தின் மீது எறியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று மேலும் 12 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனையடுத்து அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், தற்கொலைக்கு முயன்ற 12 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.