தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயன்ற போலி பத்திரிகையாளர் கைது..!
சென்னையை அடுத்த சேலையூர், எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (வயது 33). இவர் ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இவரது செல்போனுக்கு தொடர்புகொண்ட சாமி என்பவர் பத்திரிகையில் வேலை செய்வதாக கூறி, உங்கள் நிறுவனத்தில் ஒரு கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. எனவே பத்திரிகையில் செய்தி வெளியிடப்போகிறோம். இந்த செய்தியை வெளியிடக்கூடாது என்றால் ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என தெரிவித்துள்ளார். பணம் தருவதாக இருந்தால் மகாலிங்கபுரம் பகுதிக்கு வந்து தொடர்புகொள்ளுங்கள். அங்கு எங்கள் உதவி ஆசிரியர் கண்ணன் என்பவரை அனுப்புகிறோம், அவரிடம் பணம் கொடுங்கள் என கூறியுள்ளார்.
இதனால் ஜீவரத்தினம் மகாலிங்கபுரம் பகுதிக்கு சென்று அங்கிருந்து சாமிக்கு தொடர்புகொண்டார். அதனைத்தொடர்ந்து சில மணிநேரத்தில் கண்ணன் என்பவர் அங்கு வந்து ஜீவரத்தினத்தை சந்தித்து சாமி செல்போனில் கூறியதுபோல் ஒரு லட்சம் ரூபாய் கேட்டார். ஒரு லட்சம் அதிகமாக உள்ளது என ஜீவரத்தினம் கூற, இறுதியாக ரூ.15 ஆயிரம் கொடுங்கள் என கண்ணன் தெரிவித்தார். ஜீவரத்தினம் பணத்தை தயார்செய்துவிட்டு தொடர்புகொள்வதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் ஜீவரத்தினத்திடம், சாமிக்கு தொடர்புகொண்டு பணம் தயார் செய்துவிட்டேன், சேலையூர் பகுதியில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கூறச்சொன்னார்கள். அதேபோல ஜீவரத்தினம் சாமியிடம் தெரிவித்தார். அதற்கு அவர் கண்ணனை அனுப்புகிறேன், அவரிடம் பணத்தை கொடுத்துவிடுங்கள் என கூறி கண்ணனை சேலையூர் பகுதிக்கு அனுப்பினார்.
சிறையில் அடைப்பு
அப்போது ஜீவரத்தினத்திடம் கண்ணன் பணம் பெற முயற்சித்தபோது அங்கு மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த போலீசார் கண்ணனை மடக்கிப்பிடித்தனர். அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்து, அவர் மூலம் சாமியையும் பிடித்தனர். இருவரிடமும் விசாரித்ததில் அவர்கள் சென்னை, எம்.ஜி.ஆர். நகர், விவேகானந்தர் தெருவை சேர்ந்த சாமி என்கிற கருப்புசாமி (35), விருகம்பாக்கம், காந்திநகர் பிரதான சாலையை சேர்ந்த கண்ணன் (43) என தெரிந்தது.
அவர்களில் ஒருவர் ஒரு வாரப்பத்திரிகையின் அடையாள அட்டை வைத்திருப்பதாகவும், மற்றொருவர் அவரது உதவியாளர் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதுபோல பலரிடம் அவர்கள் பத்திரிகையாளர்கள் என கூறி மிரட்டி பணம் பறித்துவந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.