“அப்பட்டமான படுபயங்கரமான திட்டமிட்ட படுகொலை”:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு..!
கோடநாடு கொலை அப்பட்டமான படுபயங்கரமான திட்டமிட்ட படுகொலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில்,கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி, கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன.எஸ்டேட்டில் கொள்ளையடிக்க வந்த கும்பலால், காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார். ஆவணங்கள், பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. வழக்கில், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதனையடுத்து,ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில்,கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவைக்கு வெளியே பதாகைகளை ஏந்தி நேற்று அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்,பேரவையை இரண்டு நாட்கள் அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து,கோடநாடு வழக்கில் தன்னையும்,அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் சேர்க்க சதி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கோடநாடு கொலை அப்பட்டமான படுபயங்கரமான திட்டமிட்ட கொலை.இதில் காவலாளி கொலை செய்யப்பட்டார்.இதில் குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்திலும்,இது தொடர்பான அறிக்கையிலும் ,கோடநாட்டில் பணமும்,நகையும் கிடைக்கும் என்று குற்றவாளிகள் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே,இந்த கொலை,கொள்ளை திட்டமிட்டு நடத்தப்பட்டது”,என்று தெரிவித்துள்ளார்.
கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.